Ad Widget

சேயாவை தானே கொன்றாராம்! கொண்டயாவின் சகோதரர் வாக்குமூலம்!! இருவருக்கும் 19 வரை மறியல் நீடிப்பு!!!

வன்கொடுமையின் பின் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்ட சிறுமி சேயாவை தானே கொலை செய்தார் என்று சி.ஐ.டியினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் கொண்டயாவின் சகோதரரான ஜயலத். சேயா கொலை வழக்கு நேற்று மினுவாங்கொட நீதிமன்றில் பிரதம நீதிவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே ஜயலத் மேற்கண்டவாறு வாக்குமூலம் அளித்தார் என்று சி.ஐ.டியினர் நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினர்.

சேயா கொலைக்குப் பின்னர் கொண்டயா என்பவர் கைதுசெய்யப்பட்டார். இவர்தான் பிரதான சந்தேகநபர் என்றும் கூறப்பட்டது.

தான்தான் சிறுமியை கொலைசெய்தார் என அவர் ஒப்புகொண்டுமிருந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கொண்டயாவின் சகோதரர் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதனால், வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

அவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் தான்தான் சேயாவை கொலை செய்ததாக சி.ஐ.டியினரிடம் தெரிவித்துள்ளார். சேயா கொலைச் சந்தேகநபர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மினுவாங்கொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கொண்டயா என்ற நபரும் அவரது சகோதரர் சமன் ஜயலத் என்பவரும் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரினதும் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கொண்டயாவின் மரபணு அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் மரபணு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இரண்டு சந்தேகநபர்களினதும் மரபணுக்களை சோதனைக்குட்படுத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டுமென கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன், நாடளாவிய ரீதியில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற குரல் ஓங்கியயாலித்துக்கொண்டிருக்கிறது.

Related Posts