காக்கைதீவில் உள்ள கழிவு மீள்சுழற்சி மையத்தை அகற்றுமாறு பிரதேச மக்கள் போராட்டம்!!

யாழ்ப்பாணம், காக்கைதீவு பகுதியில் உள்ள கழிவு மீள்சுழற்சி மையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்பாக நேற்றைய தினம் புதன்கிழமை (15) காலை குறித்த போராட்டம் நடத்தப்பட்டது.

மாநகர சபையின் கழிவு மீள்சுழற்சி மையம் காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ளது.

தற்போது அங்கு மீள்சுழற்சிகள் இடம்பெறாமல் குப்பைகள் கழிவுகளை கொட்டுவதனால், அயலில் வசிக்கும் தாம் பல்வேறு இடர்களை சந்திப்பதாக குறித்த மீள்சுழற்சி மையத்துக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

மாநகர சபையினால் காக்கைதீவு பகுதியில் மீள் கழிவு மீள்சுழற்சி மையம் அமைக்கப்பட்டது. எமது குடிமனை பகுதியில் அவை அமைக்கப்படும்போது, “இது குப்பை கொட்டும் இடமில்லை. கழிவுகளை தரம் பிரித்து, அவற்றை மீள்சுழற்சி செய்யும் இடம்” என கூறினார்கள்.

ஆரம்பத்தில் அவ்வாறே இயங்கியது. அங்கு கழிவுகளில் இருந்து உரங்கள் தயாரிக்கப்பட்டன. கழிவு மீள்சுழற்சிக்கான பணிகள் நடைபெற்றன. சிறிது காலத்தில் அவை கைவிடப்பட்டு, குப்பை கொட்டும் இடமாக மாறின. அங்கு கழிவுகளை தரம் பிரிக்காமல் கொட்டி, அந்த இடம் முழுவதையும் குப்பை மேடுகளாக மாற்றியுள்ளனர்.

மலசலகூட கழிவுகள், தனியார் உணவகங்கள், தங்குமிட கழிவு நீர் என்பவற்றை வடிகட்டும் செயற்பாடுகள் அங்கு முன்னர் நடைபெற்றன. தற்போது அவை உரிய முறையில் வடிகட்டாமல், நீரினை அங்குள்ள வாய்க்காலுக்குள் விடுவதனால், அருகில் வசிக்கும் நாம் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கிறோம்.

எமது குடிமனைக்குள் உள்ள குடிநீர், கிணற்று நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. கொட்டப்படும் கழிவுகளால் இலையான்கள் பெருகி, வீடுகளில் இலையான் தொல்லைகள் காணப்படுகின்றன.

இலையான் தொல்லைகளால், வீடுகளில் உணவுகளை சற்று நேரம் கூட திறந்துவைக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. உணவை பொறுமையாக உண்ண முடியாத அளவுக்கு எமது உணவுத் தட்டுக்களில் இலையான்கள் அதிகமாக மொய்க்கின்றன.

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு பரவல் அதிகமாக காணப்படுகிறது. டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. எங்கள் வீடுகளில் சிறு சிரட்டையில் தண்ணீர் நின்றாலே, “டெங்கு பரவும் சூழலை பேணுகிறார்கள்” என நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் குறித்த கழிவுகள் மீள்சுழற்சி மையத்தில் கழிவு நீராக மாறி, அங்குள்ள வாய்க்கால்களில் தேங்கி, நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளது. அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

கழிவுகளை தரம் பிரிக்காமல் கொட்டி தற்போது இந்தப் பகுதியை குப்பைமேடாக்கியுள்ளனர் என நாம் குற்றம்சாட்டி, நடவடிக்கை எடுக்குமாறு கோரி வந்த நிலையில், கடந்த வாரம் அப்பகுதி தீ பற்றி எரிந்தது. இதனால் ஏற்பட்ட புகைமண்டலம் காரணமாக ஒரு இரவு நாம் எமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருந்தோம்.

அந்த தீ கூட திட்டமிட்டு எரிக்கப்பட்டதாகவே நாம் சந்தேகிக்கின்றோம். அது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அறிந்தோம். எனவே அது தொடர்பாக நாம் மேலும் கருத்துக் கூற விரும்பவில்லை.

குறித்த கழிவு மீள்சுழற்சி மையத்துக்கு அருகில் உள்ள குடிமனைகளில் வாழும் குடும்பங்களில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன. அது மட்டுமின்றி சுவாச நோய்கள், ஆஸ்துமா உள்ளிட்ட தொற்றா நோய்களுடன் நோயாளிகள் உள்ளனர். இந்த நோய்த்தொற்றுக்களுக்கு கூட கழிவு மீள்சுழற்சி மையம் காரணம் என கருதுகிறோம்.

எனவே இந்தக் கழிவு மீள்சுழற்சி மையத்தை எமது குடிமனை பகுதிகளிலிருந்து அகற்றவேண்டும் என கோருகிறோம் என தெரிவித்தனர்.

Related Posts