Ad Widget

கணவனால் எரியூட்டப்பட்ட பெண்ணின் சடலம் இராணுவத்தால் பொறுப்பேற்பு

கணவனால் தீ மூட்டி எரிக்கப்பட்டு உயிரிழந்த, முல்லைத்தீவு கோப்பாப்பிலவை சேர்ந்த ராசரட்ணம் ராஜினி (வயது 24) என்ற பெண்ணின் இறுதிக் கிரியைகளை இராணுவம் தாங்கள் மேற்கொள்வதாக கூறி, யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து சடலத்தை பொறுப்பேற்று புதன்கிழமை (03) கொண்டு சென்றுள்ளனர்.

இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கு குறித்த பெண்ணின் குடும்பத்தால் இயலாத நிலையில் இராணுவத்தினர் தமது வாகனத்தில் சடலத்தை எடுத்துச் சென்று இறுதிக் கிரியைகளை நடத்துகின்றனர்.

இது தொடர்பாகத் தெரியவருவதாவது,

மேற்படி பெண் இறுதிக்கட்ட யுத்தத்தில் தனது கணவனை இழந்து, 5 வயது மகன் மற்றும் 7 வயது மகளுடன் வசித்து வந்ததுடன் தொடர்ந்து, மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த ராசரட்ணம் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

எனினும் இப் பெண்ணை, ராசரட்ணம் தொடர்ந்தும் கடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி மேற்படி பெண் கணவனின் கொடுமை தாங்கமுடியாமல், தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு கணவனை மிரட்டுவதற்கு எத்தனித்துள்ளார்.

எனினும் இதனைச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட கணவன், மனைவி மீது தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

தீயால் எரிந்துகொண்டிருந்த தாயின் தீயை இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து அணைத்தனர்.

தொடர்ந்து, அயலவர்களின் உதவியுடன் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த திங்கட்கிழமை(01) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மரண விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் கொடுப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்ட போதும், குடும்ப வறுமை காரணமாக உறவினர்கள் சடலத்தை பொறுப்பேற்று இறுதிச் சடங்கை மேற்கொள்ளத் தயங்கினார்கள்.

இந்நிலையில் மேற்படி பெண்ணின் சடலத்தைத் தாம் பொறுப்பெடுத்து, இறுதிச் சடங்கை நடத்துவதாக இராணுவத்தினர் கூறி, சடலத்தை பெண்ணின் வீட்டிற்கு புதன்கிழமை (03) எடுத்துச் சென்றனர்.

இந்தப் பெண்ணின் மரணத்திற்கு காரணமான அவரது கணவனைத் தேடி வருவதாக முல்லைத்தீவுப் பொலிஸார் கூறினர்.

Related Posts