Ad Widget

இலங்கையிலேயே தொழிற்படையில் பங்காற்றுவோர் வீதம் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம்!

இலங்கை முழுவதும் மேற்கொண்ட தொழிற்படை தொடர்பான 2011 – ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன்படி இலங்கையில் தொழிற்படையில் பங்காற்றுவோர் வீதம் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் (37.1%) காணப்படுவதுடன், பால் நிலை அடிப்படையில், தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைந்த மாவட்டமாகவும் யாழ்ப்பாணமே (16.7%) விளங்குகின்றது.

இதனை மறு வார்த்தையில் சொன்னால், இலங்கையில் தங்கி வாழ்வோர் அதிகம் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதுடன், இங்கு ஆண்களையே (ஆண் – 59.7%, பெண் – 16.7%) அதிகம் நம்பி வாழும் நிலையில் யாழ்.குடாநாடு தற்போது மாறியுள்ளது. அத்துடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டுமே இத்தகைய விசித்திரமான வேலைப்படைப் பண்புகளை காண முடிவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கையின் தேசிய சராசரி வீதங்களின் அடிப்படையில் தொழிற்படையில் பங்குகாற்றுவோர் சதவீதம் மற்றும் இதில் ஆண், பெண்களின் பங்களிப்பு வீதம் என்பன முறையே 47.8%, மற்றும் 66.2%, 31.2% எனக் காணப்படுவதுடன், ஆகக் கூடிய தொழிற்படை பங்குபற்றுவோர் வீதம் கொண்ட மாவட்டமாகவும், ஆகக் கூடிய பெண்களின் தொழிற்படை பங்குபற்றல் கொண்ட மாவட்டமாகவும் முறையே அநுராதபுரம் மற்றும் நுவரேலியா காணப்பட, இவை இரண்டும் ஆகக் குறைவாகக் காணப்படும் மாவட்டமாக யாழ்ப்பாணம் உள்ளது.

மேலும், இலங்கையிலேயே அதிக வேலையின்மை கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி (93%), .மன்னார் (8.1%) ஆகிய மாவட்டங்கள் காணப்படுவதுடன் மிகக் குறைந்த வேலையின்மை கொண்ட மாவட்டமாக கொழும்பு (2.9%) உள்ளது. எனினும், யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களின் வேலையின்மை வீதத்தினை குடிசன மதிப்பு புள்ளி விபரத்தினைக்களம் வெளியிடாத நிலையில், இது 10 – 15 சதவீதத்திற்கு இடைப்பட்டதாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும், இலங்கையில் எழுத்தறிவு வீதம் அதிகம் கொண்ட மாவட்டமாக மன்னார் (99.2%) காணப்படுவதுடன், வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான வவுனியா (95.8%), யாழ்ப்பாணம் (95.7%), கிளிநொச்சி (95%) மற்றும் முல்லைத் தீவு (94.3%) ஆகியன மிகவும் முன்னிலையில் காணப்படுகின்றன. எனினும் இலங்கையின் தேசிய சராசரி (92.2%) ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதுடன், இலங்கையில் ஆகக் குறைந்த எழுத்தறிவு வீதும் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு (82.3%) உள்ளதாக 2011 – ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Related Posts