கொழும்பு மாநகர சபை (CMC), திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கான பொழுதுபோக்கு வரி விகிதங்களை குறைத்து புதிய வர்த்தமானி (Gazette) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வரி விகிதங்கள், கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதுடன், வர்த்தமானி வெளியிடப்பட்டதன் மூலம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளன.
புதிய வரி விகிதங்கள்:
- உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள் – 7%
- வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள் – 10%
- திரையரங்கு (சினிமா) நுழைவுச்சீட்டுகள் – 7%
- உள்ளூர் விளையாட்டுப் போட்டிகள் – 7%
கொழும்பு மாநகர முதல்வர் தெரிவித்ததாவது, இந்த வரி குறைப்பின் நோக்கம் பொதுமக்களுக்கு இசை, கலை, விளையாட்டு மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்வுகளை குறைந்த செலவில் அனுபவிக்கும் வாய்ப்பை உருவாக்குவதுடன், இலங்கையின் படைப்பாற்றல் மற்றும் கலைத்துறைக்கும் ஊக்கமளிப்பதாகும் என்றார்.
மேலும், இந்த வரிச் சலுகையின் பயன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மட்டுமே நின்றுவிடாமல், நுழைவுச்சீட்டு விலைகளை இயன்றவரை குறைத்து பொதுமக்களுக்கும் சென்றடைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
“இந்த சலுகையின் நன்மை தொழில்துறையுடன் மட்டுப்படாமல், பொதுமக்களையும் சென்றடைய வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்வுகள் அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாறினால், இசை, நாடகம், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள் மூலம் நகரம் மேலும் உயிர்ப்புடன் வளர்ச்சியடையும்” என்றும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.
