இலங்கை மத்திய வங்கியினால் தடைசெய்யப்பட்டுள்ள பிரமிட் திட்டங்களின் பட்டியலில் Max App Media Ltd. மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களைச் சேர்த்துள்ளதையடுத்து, அப்பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் மொத்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், Max App Media Ltd., அதன் இணை நிறுவனங்களான Max LK (Pvt) Ltd. மற்றும் Max Media Lanka (Pvt) Ltd. ஆகியவை தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டமை, அதனை நடத்திவந்தமை மற்றும் ஊக்குவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(C) பிரிவின் கீழ், திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிதாக அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மத்திய வங்கியின் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், இதுவரை அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
இந்தப் பட்டியலில் Tiens Lanka Health Care (Pvt) Ltd., Best Life International (Pvt) Ltd., Sport Chain, OnmaxDT, MTFE, Fastwin (Pvt) Ltd., Qnet / Questnet, Ledger Block, Beecoin App மற்றும் TM App உட்படப் பல நிறுவனங்கள் மற்றும் செயலிகளும் உள்ளடங்குகின்றன.
பொதுமக்கள் இத்தகைய முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னர் அவற்றின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
