மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்கள் மேற்காசியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கட்கிழமை (20) மசகு எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை வழியிலான எரிபொருள் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகளே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால விநியோக விலை 2.69 அமெரிக்க டொலராக உயர்ந்து 90.79 அமெரிக்க டொலராக ஆகப் பதிவானது.

இது கடந்த ஜூன் 11 ஆம் திகதிக்குப் பின்னரான மிக உயர்ந்த விலையாகும். கடந்த வாரம் 15.9 சதவீத விலை உயர்வைக் கண்டிருந்த நிலையில், இந்த வாரத்திலும் அவ்வளர்ச்சி தொடர்கிறது.

அதேபோல, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் விலை 2.19 அமெரிக்க டொலராக உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 84.68 அமெரிக்க டொலராக ஆக விற்பனையானது. இது ஜூன் 12 ஆம் திகதிக்குப் பின்னரான மிக உயர்ந்த அளவாகும்.

வார இறுதியில் அமெரிக்கா, ஈரானுக்கு எதிராகத் தொடர்ச்சியாக 9 ஆவது இரவாகத் தாக்குதல்களை நடத்தியது.

அதேவேளை அமெரிக்காவின் நட்பு நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மசகு எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கை வகிக்கும் ஹோர்மூஸ் நீரிணையில் இரு தரப்பும் கப்பல் போக்குவரத்துக்களைக் குறிவைத்து வருகின்றன.

Related Posts