குவைத் வான்பரப்பில் எதிரி நாட்டு டிரோன்கள் சுட்டு வீழ்த்தல் – நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் விபத்து!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடா நாடான குவைத் மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்துள்ளது.

அமைதி ஒப்பந்தம் எட்டப்படாத சூழலில் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எதிரிகளின் தாக்குதல்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்துத் தகர்த்ததன் விளைவாகவே வெடிச்சத்தங்கள் கேட்டதாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பு மீது தாம் வான்வழி தாக்குதலை நடத்தியதாக ஈரான் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் தெற்கு கெஷ்ம் (Qeshm) தீவில் அமெரிக்கா பல தாக்குதல்களை நடத்தியது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, “கெஷ்ம் தீவில் உள்ள இடங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் குடியிருப்பு, வணிக அல்லது உள்கட்டமைப்புப் பகுதிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று ஈரானின் அதிகாரப்பூர்வ IRNA செய்தி நிறுவனத்திடம், தெற்கு ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் துணை ஆளுநர் அஹ்மத் நஃபிசி தெரிவித்தார். நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை மாலை தீவில் ஐந்து முதல் ஆறு வெடிச்சத்தங்கள் கேட்டதாக IRNA செய்தி வெளியிட்டுள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் நடத்திய முந்தைய தாக்குதலுக்குப் பதிலடியாக, கெஷ்மில் உள்ள ஏவுகணை ஏவுதளத்தை இந்தத் தாக்குதல் தாக்கியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானங்களால் ஈரானிய வான்வெளி தொடர்ச்சியாக மீறப்பட்டமைக்கு” பதிலடியாக, ஷேக் ஈசா விமான தளத்தில் உள்ள அமெரிக்காவால் இயக்கப்படும் ரேடார் மீது ‘துல்லியமான நடவடிக்கையை’ மேற்கொண்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், குவைத்தின் ஆயுதப்படை செவ்வாய்க்கிழமை இரவு கூறுகையில், அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் “எதிரிகளின் ஆளில்லா விமான தாக்குதல்களுக்கு” பதிலளித்து வருவதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தது.

ஆளில்லா விமானம் எங்கிருந்து வந்தன என்பது குறித்தோ அல்லது உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்தோ அது குறிப்பிடவில்லை.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை நீரிணையை கடக்க முயன்றபோது மூன்று எண்ணெய் தாங்கிகள் (Tankers) கடல் கண்ணிவெடிகளில் மோதியதாக ஈரானின் ஆயுதப்படை தெரிவித்துள்ளது. முக்கிய வழிகளில் உள்ள கண்ணிவெடிகளை தாம் அகற்றியுள்ளதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது.

Related Posts