தென்னாப்பிரிக்காவில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் பிரிட்டோரியாவுக்கு (Pretoria) வெளிப்புறமாக, கௌடெங் (Gauteng) மாகாணத்தில் உள்ள தற்காலிக குடியிருப்புப் பகுதியொன்றில் திங்கட்கிழமை அதிகாலை 9 சடலங்கள் மீட்கப்பட்டதாகத் தென்னாப்பிரிக்கப் பொலிஸ் சேவை (SAPS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 07:30 மணியளவில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், குடிசையொன்றிற்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 6 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை உறுதிப்படுத்தினர். இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாததுடன், எவரும் கைது செய்யப்படவுமில்லை.
இரண்டாவது சம்பவம், கிழக்கு மாகாணமான குவாசுலு-நடால் (KwaZulu-Natal) பகுதியிலுள்ள பீட்டர்மரிட்ஸ்பர்க் (Pietermaritzburg) நகருக்கு வெளிப்புறமாகவுள்ள அரை-கிராமப்புறப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அங்கு துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட வாகனமொன்றை பொலிஸார் சோதனையிட்டனர்.
குறித்த வாகனத்திற்குள் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 8 ஆண்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளும், தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவங்கள் குறித்து உள்ளூர் தொலைக்காட்சியான ‘நியூஸ்ரூம் ஆப்பிரிக்கா’ (Newzroom Afrika) இடம் கருத்துத் தெரிவித்த குவாசுலு-நடால் மாகாண பொலிஸ் பேச்சாளர் கேணல் ரொபர்ட் நெட்ஷியுண்டா (Colonel Robert Netshiunda), “இத்தகைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை நாம் இதற்கு முன்னரும் பார்த்துள்ளோம். கால்நடைத் திருட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் வாடகை வாகன (Taxi) வன்முறைகள் எனப் பல்வேறு காரணங்களுக்காக இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் வன்முறைச் சம்பவங்கள் மிக அதிகமாகக் காணப்படுவதுடன், அங்கு நாளொன்றுக்குச் சராசரியாக 60 பேர் கொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.