190 சிறுவர்கள் பட்டினிப் போட்டுக் கொலை: கென்ய போதகர் குற்றவாளி என தீர்ப்பு

கென்யாவில் “கடவுளை சந்திக்க வேண்டும்” எனக் கூறி, சிறுவர்கள் உட்பட 191 பேரை பட்டினி போட்டுப் படுகொலை செய்த Doomsday என்ற வழிபாட்டுப் பிரிவின் தலைவர் போல் மெக்கன்சி (Paul Mackenzie) மற்றும் அவரது கூட்டாளிகள் 28 பேர் குற்றவாளிகளாக மொம்பாசா உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு Good News International Ministries என்ற அமைப்பைத் தொடங்கிய போல் மெக்கன்சி, தனது தீவிரப் போதனைகள் மூலம் ஆயிரக்கணக்கானோரை ஈர்த்தார். நவீனக் கல்வி கூடாதது என்றும், நவீன மருத்துவம் தீமையானது என்றும், டிஜிட்டல் அடையாள அட்டைகள் “சாத்தானின் அடையாளம்” என்றும் அவர் போதித்து வந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, தனது ஆதரவாளர்களை கென்யக் கடலோரப் பகுதியான ஷாகாஹோலா (Shakahola) காடுகளுக்கு அழைத்துச் சென்ற அவர், அங்கு ஒரு தனிச் சமூகத்தை உருவாக்கித் தீவிர மதக் கோட்பாடுகளைத் திணித்தார்.

இயேசுவைச் நேரில் காண்பதற்காகத் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போட்டு இறக்க வைக்குமாறு மெக்கன்சி தனது ஆதரவாளர்களுக்குக் கட்டளையிட்டார்.

இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுப் பலவந்தமாகப் பரலோகத்துக்கு அனுப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

காட்டிற்குள் நிகழ்ந்த உயிரிழப்புகள் ‘திருமணங்கள்’ எனக் கொண்டாடப்பட்டதுடன், இறந்தவர்கள் இயேசுவை மணந்துகொண்டதாக மெக்கன்சியின் ஆதரவாளர்கள் நம்பியுள்ளனர்.

ஒரு கர்ப்பிணிப் பெண் தான் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தைக்குப் பாலூட்டக் கூடாது எனத் தடுக்கப்பட்டு, குழந்தை 12 நாட்களில் உயிரிழந்த கொடூரமும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு முதன்முதலாக காடுகளுக்குள் தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் மூலம் இந்த விபரீதம் வெளிச்சத்திற்கு வந்தது.

காடுகளுக்குள்ளிருந்து 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது 191 பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டு மணி நேர தீர்ப்பை வாசித்த நீதியரசர் டயானா மொச்சாச்சே, மெக்கன்சியையும் அவருடன் சேர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 28 கூட்டாளிகளையும் குற்றவாளிகளாக அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விபரங்கள் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளன.

Related Posts