கடலடி இணைய கேபிள்கள் இலக்கு: ஈரான் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கடலடி இணையக் கேபிள்கள், சாத்தியமான இராணுவ மோதல்களின் போது இலக்குகளாக மாறக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளதாக ‘பார்ஸ்’ (Fars) செய்திச் சேவையை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பிரதிநிதி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் போர் ஏற்படுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்கவில்லை. இம்முறை எங்களின் பதிலடி மிகக் கடுமையானதாக இருக்கும். அமெரிக்கா கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், உலகம் பாரிய சக்திவள நெருக்கடியைச் சந்திக்கும்” என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், எதிர்காலப் போரில் ஈரான் பல்வேறு வகையான ஆயுத அமைப்புகளைப் பயன்படுத்தக்கூடும் என்றும், புதிய இலக்குகளை அடையாளம் காணக்கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

“உலகளாவிய இணையம் மற்றும் வணிகத் தரவுப் பரிமாற்றங்கள் தங்கியுள்ள 7 முக்கிய கடலடி கேபிள்கள் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்கின்றன. இதனை நாங்கள் எதிர் தரப்பினருக்கு நினைவூட்டுகிறோம்” என்றும் அந்தப் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்தியத்தில் இராணுவப் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே இத்தகைய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Posts