ஈக்குவடோரில் திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சிலுவை ஒன்று விழுந்ததில் கத்தோலிக்க அருட்தந்தையான பட்ரிசியோ அல்ஃபிரெடோ சான்செஸ் மொலினாரி (Patricio Alfredo Sánchez Molinari) உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் சனிக்கிழமை (17) ஈக்குவடோரின் குவாயாகில் நகரிலுள்ள பெர்பெத்துவோ சொக்கோரோ (Perpetuo Socorro) தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
தேவாலயத்தில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை திடீரெனக் கழன்று அருட்தந்தையின் தலையில் விழுந்துள்ளது.
இச்சம்பவம் திருப்பலி நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தபோது இடம்பெற்றதால், இந்த அதிர்ச்சி காட்சிகள் ஒளிபரப்பிலும் பதிவாகியுள்ளன.
சிலுவை விழுந்ததைத் தொடர்ந்து தேவாலயத்திலிருந்தவர்கள் அருட்தந்தைக்கு உதவியதுடன், சம்பவ இடத்திற்கு அவசர சேவையினர் விரைந்த போதிலும் அருட்தந்தை சம்பவ தினமே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தேவாலயச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை திடீரெனக் கழன்று விழுந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இது தொர்பிலான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.