13ஐ நீக்கினால் சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்: த.தே.கூ

suresh-peramachchantheranஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டால் சர்வதேச விசாரணைகளுக்கு அரசாங்கம் முகங்கொடுக்க நேரிடும்’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அதுவும் மூன்றாம் தரப்பொன்றின் மத்தியஸ்தத்தின் கீழ் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும்” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘1987ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமானது ஒரு சர்வதேச உடன்படிக்கையாகும்’ என்று சுட்டிக்காட்டினார்.

‘இந்த உடன்படிக்கை மீறப்படும் விதத்தில் 13ஆவது திருத்தத்தை நீக்க அரசாங்கத் முயற்சி செய்தால் அதற்கு எதிராக இந்தியாவினால் சர்வதேச நீதிமன்றத்தினை நாடும் வாய்ப்பு உள்ளது. அதனால், 13ஆவது திருத்தம் நீக்கப்படும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்’ என்று அவர் தெரிவித்தார்.

‘அத்துடன், இந்த 13ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. அதில் இருக்கும் அதிகாரங்கள் போதுமானவையாக இல்லை. இருப்பினும், இருப்பதை வைத்துக்கொண்டு முழுமையான அதிகாரத்தை நோக்கி நாங்கள் முன்னோக்கிச் செல்லவேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அதுவும் மூன்றாம் தரப்பொன்றின் மத்தியஸ்தத்தின் கீழ் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘தான் ஒரு ஜனநாயகவாதி என்ற மாயையை உருவாக்கும் முயற்சியின் பெயரிலேயே வட மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னதாக வட மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் ஜனாதிபதி உள்ளார்.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்துவம் மீறல் தொடர்பாக சர்வதேசம் தனது கண்டனத்தை தெரிவித்து வரும் இத்தருணத்தில் தான் ஒரு ஜனநாயகவாதி என்ற மாயையை சர்வதேசத்திற்கு காட்டுவதற்கான முயற்சியின் பேரில் இந்த தேர்தல் நடத்தப்பட இருக்கின்றது’ என்றும் சுரேஸ் எம்.பி குறிப்பிட்டார்.

‘இரு மாகாண சபைகள் தங்களுக்குள் இணங்கி செயற்படுதல் மற்றும் மாகாண சபையில் உரிய அதிகாரங்கள் தொடர்பாக சகல மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறுதல் என்ற அடிப்படையில் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். அதில் சில மாகாணங்கள் அங்கீகாரம் வழங்கலாம், வழங்காமலும் விடலாம்.

ஆனால், ஒன்பது மாகாணசபைகளின் 7 மாகாண சபைகள் தனிச் சிங்கள சட்டத்தினை கொண்டு இயங்குபவை. வட, கிழக்கு மாகாணங்களின் அங்கீகாரத்தை பெறவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு எவ்வளவு அங்கீகாரம் கிடைக்கும் என்பதும் தெரியாது’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.