தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தரப்பினர் இனவாதம் என்ற உருவமளிக்க முயற்சிக்கின்றர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் பொதுப்படுத்தப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய வகையில் நீதியமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அறிக்கையின் உள்ளடக்க யோசனைகளை செயற்படுத்த நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் அப்பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் விகாரைக்கும் இடையில் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.இந்த பிரச்சினைக்கு இனவாதம் என்ற உருவமளிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலக சட்டத்தின் பிரதான பொறுப்பாக ‘ பல்லின சமூகத்துக்குள் மற்றும் அவர்களுக்கிடையில் சிறப்பான மற்றும் முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடிய விடயங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை முன்வைப்பதாகும்’ உள்ளது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அலுவலகத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த பிரதேசத்துக்கு பலமுறை சென்று பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
முதலாவதாக யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரிடமிருந்து பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் தலைமையில் யாழ் மாவட்ட சகவாழ்வு சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பல தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதேபோல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நல்லிணக்க மத்திய நிலையத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ் மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வடக்கு மாகாண காணி பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கட்டம் கட்டமாக காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் தையிட்டி பகுதியில் காணி உரித்து கோரும் 13 குடும்பங்களின் உறுப்பினர்கள், தையிட்டி விகாரையின் விகாராதிபதி உட்பட நிர்வாக சபை மற்றும் பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அவை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் யாழ்.நாக விகாரையில் விசேட கருத்தாடல் அமர்வும் நடத்தப்பட்டது.
பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளை ஒன்றிணைத்து, இந்த விடயத்தை ஒழுங்குப்படுத்தல் தொடர்பிலும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு யோசனைகள் உள்ளடங்கிய அறிக்கை அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.நீதியமைச்சர் தலைமையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.