Ad Widget

வெள்ளை மாளிகையை தகர்ப்போம்: ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய வீடியோ

பாரீஸ் நகரில் கடந்த 13-ந் தேதி துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தீவிரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் 129 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து பிரான்ஸ் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தன. ஈராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்க கூட்டுப்படைகளும், தங்கள் பங்குக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே நியூயார்க் நகர் மீதும் குறி வைத்துள்ளோம் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த புதன்கிழமை ஒரு மிரட்டல் வீடியோ வெளியிட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதிதாக ஒரு மிரட்டல் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த புதிய வீடியோ 6 நிமிடம் ஓடக்கூடியதாக அமைந்துள்ளது. இந்த வீடியோ, பாரீஸ் நகர தாக்குதல்கள் காட்சியுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து கேமரா முன்பாக 2 தீவிரவாதிகள் பேசுவது காட்டப்படுகிறது. இந்த வீடியோவுக்கு ‘ரோமுக்கு முன்னர் பாரீஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதில், “வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம். கார் குண்டுகளை வெடிக்கச்செய்வோம். பிரான்ஸ் மீது இன்னும் கூடுதல் தாக்குதல் நடத்துவோம்” என அர்த்தம் தொனிக்கும் வகையில் ஒரு தீவிரவாதி, “இந்த நல்ல பூமியில் உள்ள சிலைகளை தகர்த்தது போல அதையும் (வெள்ளை மாளிகையையும்) நாங்கள் தகர்ப்போம்” என கூறுகிறான்.

இன்னொரு தீவிரவாதி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும், பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயுக்கும் மிரட்டல் விடுத்திருக்கிறான். அதில் அவன், “நாங்கள் அவர்களை (வெடிகுண்டு) பெல்ட்டுகளாலும், கார் குண்டுகளாலும் வறுத்தெடுப்போம்” என கூறி உள்ளான்.

இந்த வீடியோ அமெரிக்காவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு ‘எப்.பி.ஐ.’யின் இயக்குனர் ஜேம்ஸ் காமேயிடம் இதுபற்றி கேட்டபோது, “பாரீஸ் தாக்குதல் பாணியில் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தும் அபாயம் குறித்து நம்பத்தகுந்த அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை” என்றார்.

அதே நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை, “ஐ.எஸ். தீவிரவாதிகள் புதிதாக வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்வோம். அமெரிக்க அரசில் உள்ள ஒவ்வொருவரும் இந்த அச்சுறுத்தல்களை கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளோம்” என கூறினார்.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை, இந்த வீடியோ பற்றி உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Related Posts