Ad Widget

வடமாகாண சபையில் 5 பிரேரணைகள் நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 19 ஆவது அமர்வில் 5 பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

வடமாகாண சபையின் 19 ஆவது மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டடத்தொகுதியில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் புதன்கிழமை (19) இடம்பெற்றது.

இதன்போது, எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா உள்ளிட்ட 5 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட 7 பிரேரணைகள் சபையில் முன்வைக்கப்பட்டன.

இதில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் கொண்டு வந்த ‘நீர் உயிரின வளர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான காணிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் மாந்தை உப்பு கூட்டுத்தாபன காணியை வழங்குமாறு மத்திய கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கோரும் பிரேரணை அடுத்த அமர்விற்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.

அதனை தவிர, ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரனின் 2 பிரேரணைகளும் ஒரே மாதிரியான பிரேரணைகளாக இருந்தமையால் அது ஒரு பிரேணையாக மாற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நேற்றய அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 5 பிரேரணைகள் வருமாறு,

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் – விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரை கோருதல்.

வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் – முல்லைத்தீவு மாவட்டத்தில் அழிந்துபோயுள்ள 115 குளங்களை புனரமைத்து விவசாய, கமநல, கால்நடை வளர்ப்பிற்கு உதவ முன்வருதல்.

ஆளுங்கட்சி உறுப்பினர் வே.சிவயோகன் – வடமாகாணங்களிலுள்ள திணைக்களங்கள் அலுவலகங்களில் 2009 ஆம் ஆண்டு முதலான கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஊழல்களை கண்டுபிடித்து அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல்.

சிவயோகனின் இரண்டாவது பிரேரணையாக மாகாண ஒவ்வொரு அமைச்சுக்களிலும் கணக்காய்வு பிரிவுகளை தனித்தனியாக உருவாக்குதல்.

எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா – யாழ்.நல்லூர் சட்டநாதர் கோவிலில் அமைந்துள்ள மந்திரிமனை அமைந்துள்ள (9 பரப்பு) காணியை தனியார் வர்த்தக நோக்கத்திற்கான பாவனையிலிருந்து தடுப்பதற்கான நடவடிக்கையை வடக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்.

இந்த 5 பிரேரணைகளும் ஏகமனதாக சபையில் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து வடமாகாண சபை அடுத்த அமர்வு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.

Related Posts