இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) அவர்கள், நேற்று (15) யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டைக்கு விஜயம் செய்து, அதன் வரலாற்றுப் பின்னணி, கட்டடக்கலைச் சிறப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் தொடர்பில் பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின்போது, யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்று மரபுகள், அதன் தொல்லியல் முக்கியத்துவம் மற்றும் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் அது வகிக்கும் பங்கு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
போர்த்துக்கேயர்களால் ஆரம்பத்தில் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் ஒல்லாந்தர்களால் விரிவுபடுத்தப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டை, வடமாகாணத்தின் முக்கியமான வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இக்கோட்டை யாழ்ப்பாணத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
இவ்விஜயத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே. விவேகானந்தன், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான சுந்தரமூர்த்தி கபிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.