Ad Widget

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும்; சம்பந்தன்

வடக்கு – கிழக்கு இணைப்பை சிங்களத் தலைவர்கள், முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இந்திய தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். எனவே அந்தப் பாரம்பரியமான வடக்கு, கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப்பின் ஞாபகார்த்த மற்றும் பரிசளிப்பு விழா கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு வழங்கிய வாழ்த்து செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அஷ்ரப்பின் அரசியல் படிகள் மறைந்த தலைவர் தந்தை செல்வநாயகத்தையே பின்பற்றி இருந்தது.தந்தை செல்வாவினுடைய அரசியல் கொள்கைகளை அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டார். தந்தை செல்வாவின் மறைவின் பின்னர் அவரை பின்பற்றி அவரை பற்றி ஒரு கவிதையை இயற்றி எமது நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு தந்தை செ்லவாவவை மீண்டும் வருகை தருமாறு அழைத்து அக்கவிதையை பல வைபவங்களில் தானே பாடி வந்தார்.

தந்தை செல்வாவினுடைய காலத்தில் வடக்கு கிழக்கில் வாழகின்ற தமிழ் பேசும் மக்கள் அனைவரது உரிமைகளை பற்றியே பேசினார் செயற்பட்டார். அந்த நிலைப்பாட்டை மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பும் முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

அதேவேளை தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அந்தத் தீர்வில் முஸ்லிம் மக்களும் சமபங்காளிகளாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களையும் ஒற்றுமைப்படுத்தி அவர் செயற்பட்டார்.

அவர் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம் மக்களுடைய ஒரே குரலாக அவர் திகழ்ந்தார். அதேவேளையில், தமிழ்மக்களும் முஸ்லிம் மக்களும் தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் வடக்குக்கிழக்கில் ஒருமித்துச் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் அவர் உறுதியாக இருந்தார்.

நாட்டினுடைய அரசியல் வரலாற்றில் ஒரு மிகவும் இக்கட்டானதும், அதிமுக்கியமானதும் அதே நேரத்தில் அதிக சந்தர்ப்பமுள்ளதுமான தருணத்தில் நாங்கள் தற்பொழுது இருக்கின்றோம்.

இந்த நாட்டின் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி எல்லோரும் இந்நாட்டில் சமமாக வாழக்கூடிய வகையில் நாட்டுக்கு ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய ஓர் அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவதற்கு தற்பொழுது ஒரு சந்தர்ப்பம் உருவாகியிருக்கின்றது.

தமிழ்பேசும் மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் வடக்குக்கிழக்கு மாகாணங்களில் என்ன நடைபெறப்போகின்றது என்பதையொட்டி மிகவும் அக்கறையோடு இருக்கின்றார்கள்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் அதற்கென ஓர் அரசியல் வரலாறு இருக்கின்றது என்பதை எவராலும் மறுதலிக்க இயலாது.

தமிழ்த்தலைவர் தந்தை எஸ்.ஜே.வி. செல்வாநாயகம் அவர்களுடன் இலங்கையின் முன்னாள் பிரதமர்களான திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா மற்றும் திரு. டட்லி சேனநாயக்க ஆகியோர், முறையே 1957 இலும் 1965 இலும் மேற்கொண்ட ஒப்பந்தங்களினாலும், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சக்கட்ட இனவன்முறைக்குப் பிறகு அயல்நாடான இந்தியாவின் நல்லெண்ண முயற்சிகளின் ஊடாக 1987 ஆம் ஆண்டு இலங்கையின் சனாதிபதி திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களுக்கும் பாரதப் பிரதமர் திரு. ரஜீவ் காந்தி அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் வடக்குக்கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் சில அடிப்படை உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

இவற்றினூடாக வடக்குக்கிழக்கில் வாழ்கின்ற அனைத்து மக்களின் உரிமைகளும் பேணிப்பாதுகாக்கப்படும் அதேவேளையில் வடக்குக்கிழக்கின் மொழி ரீதியான அடையாளமும் நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த அடையாளம் நிரந்தரமாகத் தொடரப்பட வேண்டியது அத்தியாவசியமாகும். இந்த உண்மையை தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் நன்கு புரிந்துகொண்டிருந்தார். அதேநேரம் இந்த உண்மையை பெரும்பான்மை இனத் தலைவர்களாகிய முன்னாள் பிரதமர்களான திரு. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா மற்றும் திரு. டட்லி சேனநாயக்க ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி ஜயவர்த்தன அவர்களும் முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்தனர்.

இதன் காரணமாகத்தான், ஜனாதிபதி திரு. ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களுக்கும் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களுக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பின்னர் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேசி வடக்குக்கிழக்கு சம்பந்தமாக சில ஒழுங்குகள் செய்யப்பட்டன.

இவை பலராலும், விசேடமாக தமிழ் முஸ்லிம் தலைமைத்துவங்களால் நன்கு உணரப்பட்ட விடயங்களாகும். இதன் காரணமாக, ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் அவர்களால், மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் காலத்தில், 2000 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட அரசியல் சாசனப் பிரேரணைகளில் இந்த நிலைப்பாடு அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “ஒஸ்லோ” கூட்டறிக்கையின் பிரகாரம் ஒருமித்த நாட்டுக்குள் தமிழ்பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் (வடக்குக்கிழக்கில்) அரசியல் தீர்வு சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் தொடர்ச்சியாக இந்த நிலைப்பாடு பேணப்பட்டு வந்துள்ளது.

இந்த அடிப்படை உண்மைகளைக் கபடமான செயற்பாடுகளினூடாக இல்லாமல் செய்ய முடியாது. தமது உரிமைகளைப் பெறுவதற்காக தமிழ்மக்கள் பாரிய தியாகங்களைச் செய்திருக்கின்றார்கள்.

அந்த அரசியல் போராட்டங்களைத் தமிழ் மக்கள் முன்னின்று பல தசாப்தங்களாக, பல வடிவங்களில் நடாத்தியிருக்கிறார்கள். தமிழ்மக்கள் பாரிய அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்திருக்கிறார்கள்.

அத்தோடு மேலும் பல சவால்களையும் எதிர்கொண்டுள்ளார்கள். இந்த உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் மதிக்கப்பட வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் காரணமாக முஸ்லிம் மக்களுக்கும் பாரிய அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றன. இதனையும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் காரணமாக நாட்டிலுள்ள சகல மக்களும் பல்வேறு அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்துள்ளார்கள். இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இறுதியாக ஏற்படுகின்ற தீர்வு மக்களுடைய அடிப்படை உரிமைகள், போராட்டங்கள், மக்களுடைய இழப்புக்கள் மற்றும் அழிவுகளை ஈடு செய்யும் வகையில் அமைய வேண்டும். விசேடமாக, உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்மக்கள் செய்த தியாகங்கள், அனுபவித்த இழப்புக்கள், அழிவுகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியதாக அத் தீர்வு அமைய வேண்டும்.

ஏற்படுகின்ற அரசியல் தீர்வானது விசேடமாக வடக்குக்கிழக்கை மையமாகக் கொண்டு இற்றைவரையில் பேசி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.

எல்லா மக்களுக்கும் நீதியானதும் நியாயமானதுமான தீர்வாக அத்தீர்வு அமைய வேண்டும். அவ்விதமான ஒரு தீர்வை அடைவதற்கு நாங்கள் எல்லோரும் ஒருமித்துச்செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதன் மூலமாகவே எமது மக்கள் அனைவரும், ஏற்படப்போகின்ற தீர்வில் திருப்தியடைய முடியும். இதன் மூலமே நாட்டைப் பொறுத்த வரையில் எதிர்காலம் சுபீட்சமானதாக அமைய முடியும். இந்த நேரத்தில் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் இல்லாதிருப்பது எங்கள் எல்லோருக்கும் ஒரு பேரிழப்பு என நான் கருதுகின்றேன்.

எமது மக்கள் வரலாற்று ரீதியாக தாம் வாழ்ந்த பிரதேசத்தில் ஒருமித்த நாட்டுக்குள் தொடர்ந்து சுபிட்சமாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் நாங்கள் எல்லோரும் நிதானமாகச் செயற்படுவது அத்தியாவசியமென்று நான் மிகவும் வினயமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என இரா.சம்பந்தன் தனது வாழத்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Posts