Ad Widget

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆவா குழு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வின்போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆவா குழு நுழைந்ததாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்று மகிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பு பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயஷாந்த கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

“யாழ். பல்கலைக்கழத்தில் பொங்கு தமிழ் நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வு பல்கலைக்கழக துணைவேந்தரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட பின்னர் தனி ஈழக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக, தமிழ் மக்களை அடிப்படைவாதத்திற்கு ஈர்ப்பதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வே பொங்கு தமிழ் நிகழ்வாகும்.

எனவே அதன் தூபி திறப்பு விழா நிகழ்வின்போது, யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆவா குழு நுழைந்ததாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் தற்போது மக்களுக்கு நிம்மதியாக வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் காலத்தைவிடவும் மோசமான சூழல் தற்போது அங்கு ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கு கடமையில் ஈடுபடுவதனைக் காணமுடியாதுள்ளது. ஆகவே வடக்கு தற்போது பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts