முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (9) அமர்வில் கலந்து கொண்டு, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியா நிலையில் பதில் வழங்கியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
கடந்த மாதம் ஒவ்வாமை காரணமாக சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 21 ஆம் திகதி மரணித்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பில் தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்தார்.
தற்போது வைத்தியசாலை மற்றும் மாகாண மட்டத்தில் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த அறிக்கைகளின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
வைத்தியசாலையின் பணிக்குழாமினரின் அசமந்த போக்கினாலேயா இந்த மரணம் இடம்பெற்றுள்ளது? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
எனவே அந்த விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையாத விடயங்களை எதிர்வரும் நாட்களில் வௌிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.