போக்குவரத்து சட்டத்தில் திருத்தம்!! போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

மதுபானம் மாத்திரமன்றி வேறு போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளையும் சோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் போக்குவரத்து சட்ட ஒழுங்கு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இதன் பின்னர் வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது எவரேனும் சாரதி போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்படுமாக இருந்தால் சாரதியை அரச வைத்தியர்களிடம் அழைத்துச் சென்று சோதனை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிமை (8) இடம்பெற்ற போக்குவரத்து சட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மோட்டார் வாகன சட்டத்தில் மதுசாரம் அல்லது மதுபானத்தை அருந்திய பின்னர் வாகனமொன்றை வீதியில் செலுத்த முடியாது என்ற சட்டம் உள்ளது. குறிப்பாக மதுசாரம் தொடர்பிலேயே அந்த சட்டத்தில் உள்ளது. ஆனால் அந்த சட்டத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்தும் போது அது தொடர்பில் பரிசோதிப்பதற்கான முறைமைகள் இருக்கவில்லை. இதனால் இது தொடர்பில் ஒழுங்குவிதிகளை தயாரிக்கும் வகையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பான வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் ஒழுங்குவிதிகளே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

இதன்படி எவரேனும் நபர் ஏதேனும் போதைப் பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தியமை தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்படுமாக இருந்தால்,அந்த நபர் அரச மருத்துவரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடமோ பரிசோதனைக்காக முன்னிலைப்படுத்த முடியும். சாரதியொருவரின் செயற்பாடு, நடவடிக்கைகள், பேச்சுகள் தொடர்பில் சந்தேகங்கள் ஏற்படுமாக இருந்தால் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளரா என்று சிறுநீர், இரத்த பரிசோதனைகளை செய்வதற்காக அரச மருத்துவரிடம் கொண்டு செல்வதற்கான அதிகாரம் கிடைக்கவுள்ளது என்றார்.

Related Posts