Ad Widget

யாழ். நகரில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்!!

யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது.

அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

மேலும் நட்சத்திர விடுதிகள் மூன்றின் உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால் அவர்களில் இருவருக்கு முறையே 21 ஆயிரம் ரூபா மற்றும் 15 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த மேலதிக நீதிவான், அந்த நட்சத்திர விடுதிகள் இரண்டையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் ஒருவர் குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட நிலையில் அவருக்கான தண்டனைத் தீர்ப்பை ஒத்திவைத்த மன்று, அவரது நட்சத்திர விடுதி தொடர்பான சுகாதாரச் சீடுகேடு பற்றிய அறிக்கையை மன்றில் சமர்பிக்க அவகாசம் வழங்கி வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

மேலும் இதே குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்ட நட்சத்திர விடுதி உரிமையாளர் ஒருவர் இன்று மன்றில் முன்னிலையாகத் தவறினார். அவருக்கு அழைப்புக் கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

Related Posts