Ad Widget

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் குளவிகள் – வட்டுக்கோட்டையில் 50 பேர்வரை பாதிப்பு!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக மரம் ஒன்றில் கட்டியுள்ள குளவிக் கூடு கலைந்து 50 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றனர்.

இந்தக் குளவிக் கூட்டை அழிப்பதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு அழைத்த போதும், கிராம சேவையாளரின் அனுமதியைப் பெற்று மாநகர முதல்வரின் அனுமதியைப் பெற்றுத் தருமாறு கூறப்பட்டது என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண் ஒருவர் உள்பட இருவர் உயிரிழந்தனர். அத்துடன், நூற்றுக் கணக்கானோர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர்.

இந்தச் சம்பவங்கள் ஊரெழு மற்றும் மட்டுவிலில் இடம்பெற்றன.

வவுனியா காடுகளில் உள்ள இந்தக் குளவிகள் காற்றுக்கு பரவலடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. குளவிக் கூடு கலைந்தால் குளவிகள் மனிதர்களை நீண்ட தூரம் துரத்திச் சென்று தாக்கும் என வனவள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குளவிகள் கொட்டினால் ஒவ்வாமை (allergies reactions) கொண்டவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக மரம் ஒன்றில் கட்டியுள்ள குளவிக் கூடு நேற்றுமுன்தினம் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கலைந்ததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 50 பேர்வரை குளவிக் கொட்டுக்கு உள்ளாகினர்.

அவர்களில் 5 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஏனையோர் உள்ளூரில் தனியார் மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்றனர்.

இந்தக் குளவிக் கூடு தற்போதும் அந்த மரத்தில் உள்ளதால் அதனை அகற்றுவதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு அழைத்த போதும், கிராம சேவையாளரின் அனுமதியைப் பெற்று மாநகர முதல்வரின் அனுமதியைப் பெற்றுத் தருமாறு கூறப்பட்டது என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வனவள அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்புப் பிரிவினர் இந்த விடயத்தில் அக்கறை கொண்டு ஆபத்தை தடுக்க முன்வரவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Posts