யாழில் நாளை கல்முனை வடக்கு போராட்டத்துக்கு ஆதவாக கவனயீர்ப்பு

கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற் முன்பாக நாளை பிற்பகல் 2 மணிக்கு இப்போராட்டம் இடம்பெறும் என சைவ மகா சபை அறிவித்துள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி சைவ, பௌத்த, கிறிஸ்தவ மதகுருமாரும் அப்பிரதேச பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் இணைந்து தொடர் உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணவேண்டிய தேவை இருந்தும் அரசு இப்பிரச்சினையை இழுத்தடித்து வருகின்றது. இதனால் தொடர் உணவு ஒறுப்பு போராட்டத்தில் இருப்போரின் உடல்நிலை மோசமாகிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே அங்கு உண்ணா நோன்பிருக்கும் உறவுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதுடன் கல்முனை பிரதேச செயலகத்தை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி நாளைய போராட்டம் இடம்பெறவுள்ளது.

இப்போராட்டத்தில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைவரையும் உணர்வுபூர்வமாக பங்கெடுக்குமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.

Related Posts