Ad Widget

யாழில் தடுப்பு கைதி உயிரிழப்பு விவகாரம் : விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் அதிகாரிகள் குழு நியமனம்

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னரே நீதிமன்றில் முற்படுத்தியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே நேற்றையதினம் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

உயிரிழந்தவரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அதனால் சந்தேக நபர்கள் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர் சிறைச்சாலையில் இருந்த போது சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் குறித்த நபர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை, சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை உயிரிழந்த இளைஞன் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது , தனக்கு நடந்த சித்திரவதை தொடர்பில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் ” என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள். துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள்.

பின்னர் எனக்கு குடிக்க சாராயம் தந்தார்கள். தாக்குதல்கள் சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள்.

பொலிஸாரின் தாக்குதலுக்கு பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை. என தெரிவிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Related Posts