கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டக் குழுவின் கொட்டகைக்குத் தீ வைப்பு!!

முல்லைத்தீவு கேப்பாபிலவில் சொந்த நிலங்களை மீட்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் போராட்டக் கொட்டகை இன்று (02.11.2026) அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கேப்பாபிலவு மக்கள் தங்கள் பூர்வீகக் காணிகளை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கக் கோரி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

கடந்த 21.10.2026 அன்று இராணுவத்தின் வசமிருந்த 6.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட போதிலும், ஏனைய மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்து நிலை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மீதமுள்ள காணிகளையும் விரைவாக விடுவிக்கக் கோரி இராணுவ முகாம் வாயிலுக்கு முன்பாக மக்கள் போராட்டக் கொட்டகையை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இரவு கொட்டகைக்கு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதத்தில் போராட்டக் கொட்டகை, அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் தீயில் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

தங்களின் நியாயமான போராட்டத்தை முடக்கும் நோக்கத்துடனேயே இத்தகைய வன்முறைச் செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகப் போராட்டக் குழுவினர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts