வலி. வடக்கில் ஒரே நாளில் இடம்பெற்ற சோகம்: விபத்துகள் மற்றும் திடீர் மரணங்களால் ஐவர் பலி!

வலி. வடக்குப் பகுதியில் இடம்பெற்ற வெவ்வேறு சோகச் சம்பவங்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். விபத்துகள், திடீர் மரணங்கள் மற்றும் நீரில் மூழ்கியமை போன்ற காரணங்களால் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.

தெல்லிப்பளை, அலுக்கைச் சந்தியில் மூன்று பேருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது வீதியின் ஓரத்தில் இருந்த மதில் அவர்கள் மீது சரிந்து விழுந்ததில் சுன்னாகத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிரதீப் சஞ்சய் மற்றும் நீர்வேலியைச் சேர்ந்த 36 வயதுடைய ரஜீவன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த மற்றுமொருவர் மீட்கப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை அளவெட்டிப் பகுதியில் அதிகளவில் போதைப்பொருள் பாவித்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய இளைஞர் ஒருவர், இரவு படுக்கைக்குச் சென்ற நிலையில் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றொரு சம்பவமாக வறுத்தலைவிளான் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இவ்வாறு விபத்துகள் மற்றும் திடீர் மரணங்களால் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சுன்னாகம் பகுதியில் வயலில் விவசாய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரொருவர் தவறி நீரில் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரே பகுதியில் குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த சோகச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெருஞ் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Related Posts