அனலைதீவு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டிற்கு அதிரடிச் சோதனைக்காகச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த பொலிஸாரைக் கண்டதும், வீட்டிலிருந்த இளைஞன் தனது உடமையில் இருந்த வாள் ஒன்றினை வீட்டின் கிணற்றினுள் வீசியுள்ளார்.
இதனை உடனடியாக அவதானித்த பொலிஸார், வாளினை வீசிய அந்த இளைஞனைப் பிடித்து, அவரையே கிணற்றினுள் இறக்கி அந்த வாளினை மீட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர சோதனை நடவடிக்கையின் போது, அங்கிருந்து மேலும் ஒரு வாள் மற்றும் இரண்டு முகமூடிகள் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞனையும், மீட்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் இரண்டு முகமூடிகளையும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.