யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு: அணிதிரண்டு தடுக்க அழைப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்காக மேற்கொள்ளப்படவுள்ள காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுப்பதற்கு அனைவரையும் இன்றைய தினம் (12.07.2023) மண்டைதீவில் அணிதிரளுமாறு யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை; வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில் இன்று அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் நாளை (12.07.2023) காலை.7.30 மணியளவில் மண்டைதீவு கிழக்கில் நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts