யாழ்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடை தொடர்பாக யாழ். மாநகர சபையின் நேற்றைய அமர்வில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
யாழ்.மாநகர சபையின் முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது நல்லூர் மகோற்சவத்தின்போது அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை தொடர்பாக கடும் வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றன.
குறிப்பாக நல்லூர் ஆலய பின்பக்க பருத்தித்துறை வீதி முழுமையாக தகரம் இட்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். எனவே அந்த வீதியைத் திறந்துவிடுமாறு உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
கடந்த முறை நடைபெற்ற விசேட யாழ்.மாநகர சபை அமர்விலும் வீதித் தடையை அகற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்கப்படும் என்று யாழ்.மாநகர சபை முதல்வரால் உத்தரவாதம் வழங்கப்பட்டது.
எனினும் வீதித்தடை தற்போது வரை அகற்றப்படவில்லை மாநகரசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மக்கள் பாதுகாப்புக்காகவே வீதித் தடை போடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்ததையடுத்து அங்கு குழப்ப நிலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.