Ad Widget

முஸ்லிம் தலைமைகளைப்போல தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா? – தவராசா

இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து எடுத்த முடிவைப்போன்று தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து முஸ்லிம் தலைமைகள் 9 பேர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து எடுத்த முடிவு வரவேற்கத்தக்கதும் பாராட்டிற்குரியதும் ஆகும். தமிழ் இனம் அல்லற்பட்ட வேளைகளில் தமிழ்த் தலைமைகள் இவ்வாறு ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் இன்று நாம் எமது இனத்தின் விடிவை நோக்கிப் பல மைல்கற்கள் முன்னோக்கி நகர்ந்திருப்போம்.

முஸ்லிம் மக்கள் இன்று ஓர் பாரிய நெருக்கடியினைச் சந்தித்திருக்கின்ற சூழ்நிலையில் எவ்வித கட்சிப் பாகுபாடுகளுமின்றி முஸ்லிம் தலைமைகள் யாவரும் ஒன்றிணைந்து தத்தமது பதவிகளைத் துறந்தமையானது தமது இனத்தின் நலன்களை ஏனைய நலன்களினை விடவும் முன்னிலைப்படுத்தி செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டுகிறது.

அதிலும் குறிப்பாக தேசியக் கட்சியில் போட்டியிட்டு சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகள் மூலமாக தெரிவு செய்யப்பட்ட அமீர் அலி போன்றோர்களும் இவ்விடயத்தில் ஏனைய முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து தமது பதவியினை இராஜினாமா செய்துள்ளமை மிகவும் பாராட்டிற்குரியது.

முஸ்லிம் தலைமைகளின் அரசியல் செயற்பாடுகளைப்போல் தமிழ்த்தலைமைகளாலும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முடியாதது ஏன்?

தமிழினம் இதுவரை எத்தனையோ இன்னல்களை, அனர்த்தங்களை, சவால்களைச் சந்தித்துவந்துள்ளது, இன்றும் சந்தித்துக்கொண்டேயிருக்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டவர்கள், படைகள் வசமிருக்கும் தனியார் காணிகள், வடக்கு கிழக்கில் தொல்பொருட் திணைக்கள அதிகாரிகளின் வரம்பு மீறல் செயற்பாடுகள், யுத்தகால நிகழ்வுகள் தொடர்பாக பொறுப்புக்கூறல் விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன.

ஒரு விடயத்திலேனும் தமிழ்த்தலைமைகள் ஒன்றிணைந்து இதுதான் எமது நிலைப்பாடு என்று அரசிற்கு எடுத்துக்கூறிய வரலாறு உண்டா? இனிமேலாவது இவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா?

அடுத்த தேர்தலில் தமது கதிரைகளை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது அல்லது எவ்வாறு கதிரையினை எட்டிப்பிடிப்பது என்ற அரசியலிற்கு அப்பால் எமது இனத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தி தமிழ்த்தலைமைகள் அரசிற்கும் சர்வதேசத்திற்கும் ஒரே குரலில் அளுத்தம் கொடுக்க இனிமேலாவது முன்வருமா? ” என கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Posts