மக்களின் இன உணர்வுடனான பேராதரவுடன் தொடர்கிறது “நீதியின் ஓலம் 2” போராட்டம்!

யாழ். செம்மணியில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனிதப் படுகொலைக்கு நீதி கோரியும், சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே இதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்தும் முகமாகவும் தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் ”நீதியின் ஓலம் 2“ நீதி கோரும் தொடர் போராட்டத்தின் இறுதி நாளான இன்று (17) திங்கட்கிழமை மக்களின் பேராதரவுடன் எழுச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த 14ம் திகதி மாலை செம்மணி மனிதப் புதைகுழி அகழும் இடத்திற்கு முன்பாக உணர்வுபூர்வமாகவும் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மதகுருமார்கள், அரசியற் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தாயக செயலணி செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர், பொதுமக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என அனைவரின் பாரபட்சமின்றிய ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம் இன்றுடன் நிறைவு பெறவுள்ளது.

இன்றைய போராட்டத்தின் போது, எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் ஒரு இறுக்கமான தீர்மானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மகஜர் ஒன்றும் ஏற்பாட்டாளர்களால் யாழ். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் காரியாலயத்தில் கையளிக்கப்படவுள்ளது.

எனவே, போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பெருவாரியாகக் கலந்து எமது மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்கும் இப்போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கி தமிழ் மக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உறுதியான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கான நிலைமையை உருவாக்க வேண்டும் என தாயக செயலணியினரால் அழைப்பு விடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts