யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவத்தைக் கண்டித்தும், அகற்றிய சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக் கோரியும் வடக்கு, கிழக்கின் பல இடங்களில் திங்கட்கிழமை (28) கவனயீர்ப்புப் போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
தியாக தீபம் திலீபனின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வையொட்டி, நல்லூர் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை, நினைவேந்தல் முடிவடைந்த நிலையில் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸாரால் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டது. பொலிஸாரின் இச்செயலைக் கண்டித்தும், அகற்றப்பட்ட சிலையை உடனடியாக மீள அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் திலீபனின் நினைவாலயம் முன்பாகவே கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை வவுனியாவில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் பேரணியும் கவனயீர்ப்புப் போராட்டமும் இடம்பெற்றன. வவுனியா பொங்குதமிழ் நினைவுத் தூபிக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து போராட்டக்காரர்கள் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவுசெய்தனர்.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி அ.அமலநாயகி தலைமையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன் உட்பட பல அரசியல்வாதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையைப் பாதுகாக்குமாறும், நினைவு கூறும் உரிமையை மறுக்காதே என்றும் வலியுறுத்தி, சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராகக் கடும் கண்டனங்களை எழுப்பினர்.
மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலையின் அடியில், மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சங்கத் தலைவி மனுவல் உதய சந்திரா, மாக்கஸ் அடிகளார், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு, பொலிஸாரின் நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழர்களின் பண்பாட்டு சுதந்திரம் மற்றும் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகளும் பண்பாட்டுச் சுதந்திரமும் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், அனைவருக்குமான சம உரிமையை வலியுறுத்தியதுடன், அகற்றப்பட்ட திலீபனின் சிலையை உடனடியாக அதே இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.





