நல்லூரில் தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்டமைக்கு அரசாங்கம் காரணமில்லை என்றால் , அவ்விடத்தில் சட்ட ரீதியாக சிலையை நிறுவ அனுமதிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்ட விடயத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சி . வீ.கே சிவஞானத்திடம் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
பொலிஸார் சிலையை அகற்றிய விடயத்திலே தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அதற்கு தாங்கள் பொறுப்பில்லை என்ற வகையிலே கடற்தொழில் அமைச்சர் கூறியுள்ளார்
அமைச்சருக்கோ அரசாங்கத்திற்கு சிலை அகற்றப்பட்டதில் தொடர்பில்லை என்றால், தயவுசெய்து சிலையை திருப்பிக் கொண்டுவந்து வையுங்கள். சிலையை மீள வைத்தால் பிரச்சனை முடிந்தது.
தியாக தீபத்திற்கு சிலை வைக்கும் விடயத்தில் மாநகர சபை எதிர்க்காது. அவ்வாறு எனில் மாநகர சபையினால் அமைச்சர் என்ற ரீதியில் கடற்தொழில் அமைச்சருக்கு விண்ணப்பம் தந்தால் அதனை அங்கீகரித்து , அமைச்சரவை அனுமதி பெற்று , சட்டரீதியாக சிலை வைக்க அனுமதி பெற்றுக்கொடுங்கள்
தயவுசெய்து சிலை வைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சர் மற்றும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
நானும் தமிழ் அரசு கட்சியும் சிலை வைப்பிற்கு எதிரானவர்களாகவும், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் துணை போனதாகவும், எங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் தான் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாக அபாண்டமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது,
அவ்வாறாக நாங்கள் சிலை வைத்தமைக்கு எதிரானவர்கள் என்ற ஒரு கருத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்த விடயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
என்னுடைய கோரிக்கையின் பெயரிலோ, அல்லது தூண்டுதலின் பெயரிலோ சிலை அகற்றப்பட்டது என்பது ஒரு அபாண்டமான, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு.
நினைவேந்தல் விடயங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தாங்கள் தான் எல்லாம் செய்யலாம், தங்களுக்கு தான் நினைவேந்தல்கள் குத்தகை தரப்பட்டது போன்று , தாங்கள் தான் எல்லாம் என தாமாகவே பிரகடனப்படுத்தி, நினைவேந்தல் குழுக்கள் என உருவாக்கி நினைவேந்தல்களை செய்கிறார்கள்
தமிழ் தேசிய கட்சி என்று கூறக்கூடிய தமிழரசு கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப், , டெலோ போன்ற கட்சிகள் இல்லாமல். தனியே தமது கட்சி ஏகபோகம் என , ஏனையவர்களை களங்கப்படுத்தி, செயல்படுவது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தியாகி திலீபனின் அஞ்சலியை வைத்து நாங்கள் யாரும் அரசியல் செய்கிறது நாகரிகமான விஷயம் அல்ல என்பதும், அப்படி நடக்கிறது என்ற கவலையையும் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
இதற்கு மேல ஒன்றும் நான் சொல்ல விரும்பவில்லை. நானோ அல்லது எங்கள் கட்சியோ பொலிஸாருக்கு சொல்லி தான் இந்த சிலையை அகற்றினார்கள் என்று சொல்கிறார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்களா நாம் ?
எனவே மக்கள் இவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்