Ad Widget

புதிய தீர்மான வரைவை ஜெனிவாவில் முன்வைத்தது அமெரிக்கா! – வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே விசாரணை

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மான வரைவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்குப் பிரதான அனுசரணையாளரான அமெரிக்காவுடன் பிரிட்டன், மஸிடோனியா, மொன்டிநிக்ரோ மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

விரைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு 2016 ஆம் ஆண்டு வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணையின் முழுமையான அறிக்கை எழுத்து மூலம் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் அமெரிக்காவின் தீர்மானம் கோரியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தற்போது நடைபெற்று ஜெனிவா கூட்டத்தில் சமர்ப்பித்திருந்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை அமெரிக்கத் தீர்மானம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி இலங்கை அரசு நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இன நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சிவில் நிர்வாக கட்டமைப்புக்கான ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்காவின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தீர்மானத்தின் எந்தவொரு இடத்திலும் உள்ளக விசாரணை என்று கூறப்படவில்லை. இதேவேளை, சர்வதேச விசாரணை என்ற சொற்பிரயோகமும் தீர்மானத்தின் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

ஆனால், பொதுநலவாய நாடுகள் மற்றும் வேறு வெளிநாடுகளின் நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு கடந்த சில நாட்கள் நீடித்த இழுபறியின் பின்னர் இலங்கை அரசும் கருத்தொருமைப்பாட்டுடன் நேற்று ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தீர்மான வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள வாசகங்களில் வாக்கெடுப்புக்கு முன்னர் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு ஊக்கமளித்தல் என்ற தலைப்பில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் தீர்மான வரைவு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இந்தத் தீர்மான வரைவு தொடர்பாக, கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முறைசாராக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்போது இலங்கையுடன் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளும் தீர்மான வரைவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தின.

இரண்டாவது முறைசாராக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, தீர்மான வரைவில் இடம்பெற்றுள்ள 26 செயற்பாட்டு பந்திகளில், 14 பந்திகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன், தீர்மான வரைவில் மேலும் பல பகுதிகளைத் திருத்தம் செய்யவும், மொழி நடையில் மாற்றம் செய்யவும் இலங்கைத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையும் அதன் நேசநாடுகளும் கோரியபடி இல்லாவிடினும் தீர்மான வரைவில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நேற்று அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மான வரைவில் காணமுடிகின்றது. நேற்றையதினம் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நண்பகல் வேளை வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட போதிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் நேற்றைய அமர்வு நிறைவு நேரத்திலேயே அது சமர்ப்பிக்கப்பட்டது.

Related Posts