Ad Widget

பாடசாலை அதிபர்களுக்கான இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

வடமாகாண பாடசாலைகளில் 7 ஆண்டுகளாக ஒரே பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களுக்கான இடமாற்ற பட்டியல் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறையில் சீர் செய்யப்பட்ட இந்த இடமாற்றப் பட்டியல் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.

கல்வி அமைச்சின் சுற்றரிக்கைக்கு அமைய ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக 7 வருடங்கள் கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவது வழமை. அந்தவகையில் பாடசாலைகளின் அதிபர் இடமாற்றப் பட்டியல் கடந்த வாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிபர்களின் இடமாற்றத்தை பொருத்தமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்ற வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமைய இடமாற்றத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அதிபர்களின் விவரங்கள் வலயக் கல்வி அலுவலர்களினால் மாகாண கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் வலயக்கல்வி அலுவலகங்களுக்கு நேரில் சென்று இடமாற்றத்துக்கு தகைமை பெறும் அதிபர்களை நேர்முகம் செய்து அதிபர்களின் தரம், சேவைக் காலம் என்பவற்றை பரிசீலனை செய்து ஏற்புடைய பாடசாலை தெரிவுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts