Ad Widget

நிலாவரையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தியதாக வலி.கிழக்கு தவிசாளர் மீது வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப் பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள விசாரணையில் உள்ள வழக்கு என மத்திய அரசின் திணைக்களங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்குகள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இவ் வழக்குகளுக்கான அழைப்பாணைகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி பொலிஸாரினால் கையளிக்கப்பட்டுள்ளன.

நிலாவரை கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களமும் இராணுவமும் இணைந்து இரண்டு தடவைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இவ் அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டன.

மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தவிசாளரே காரணம். பலரை அழைத்து தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முறையிட்டனர்.

அதனடிப்படையில், தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நளின் வீரரத்தினவுக்கும் இடையில் மல்லாகம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர், அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளடங்கியோர் சமரசத்திற்கு முயற்சித்தனர்.

தவிசாளரை நிலாவரை விடயத்தில் தலையிடக்கூடாது எனக் கூறி சுமார் மூன்று மணிநேரம் விசாரணைகளும் இடம்பெற்றன. இதற்கு தவிசாளர் உடன்படவில்லை.

தவிசாளர், தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்குமுகமாக தமக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்துவதுடன் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்படவேண்டும் என விட்டுக்கொடுப்பின்றி வலியுறுத்திய நிலையில் தொடர்ந்து தவிசாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பில் வலி.கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்ததாவது;

தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் அமைச்சர், பிரதேச சபை , பிரதேச செயலகம் போன்றவற்றிற்கு அறிவித்து மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் அனுமதி பெற்றே நிலாவரை மற்றும் உருத்திரபுரம் சிவன் ஆலயப் பகுதிகளில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவேண்டும் என தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

எனினும் தற்போதைய நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மற்றும் தமக்கு உத்தியோக பூர்வ அறிவிப்புக்களை செய்து தொல்லியல் திணைக்களம் செயற்பட கோரிய தவிசாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசின் அறிவிப்பிற்கும் நடைமுறைக்குமிடையில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – என்றார்.

.

Related Posts