யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலாக நேற்று மாலை 5 மணியளவில் அடையாளம் தெரியாத ட்ரோன் (Drone) ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டுப் பறந்ததால் சிறைச்சாலை நிர்வாகத்திடையே பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
சிறை அதிகாரிகள் அதனை அவதானிப்பதற்குள் அந்த ட்ரோன் அங்கிருந்து மறைந்துள்ளது.
இது குறித்து சிறைச்சாலை நிர்வாகம் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, சிறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.
பொலிஸாரின் விசாரணையில், அந்த ட்ரோன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்படும் பாலங்களைக் கண்காணிப்பதற்காக அனுமதி பெறப்பட்ட ஒன்று எனத் தெரியவந்தது.
பாலங்களைக் கண்காணிக்க அனுமதி இருந்தபோதிலும், சிறைச்சாலையின் வான்பரப்பிற்குள் அதனை இயக்கியமைக்காக, ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.