நியூயோர்க்கின் உயரமான கட்டிடத்தில் காதல் ஜோடி செய்த காரியம்!!

நியூயோர்க் நகரிலுள்ள எம்பயர் அரச கட்டிடத்தின் உயரமான கோபுர உச்சியின் மேல் ஆபத்தான முறையில் ஏறி, திருமண முன்மொழிவை செய்ததாகக் கூறப்படும் இளம் ஜோடியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட சாகசங்களில் ஈடுபடும் எஞ்சலா நிகோலாவ் (Angela Nikolau) மற்றும் வான்யா பீர்கஸ் (Vanya Beerkus) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருப்பு நிற ஆடைகளை அணிந்தபடி சுமார் 1,454 அடி உயரத்திலான தொலைத்தொடர்பு கோபுரத்தின் உச்சிக்கு சென்றிருந்தனர்.

இந்த சாகசப் பயணத்தை சமூக ஊடகங்களிலும் நேரலையாகப் பதிவு செய்தனர்.

அதிகாரத்தின் மீதான காதலை விட காதலின் அதிகாரம், மேலோங்கும்போது உலகம் அமைதியை அறியும்’ என்ற வாசகம் எழுதப்பட்ட கொடியொன்றையும் பறக்க விட்டிருந்தனர்.

கயிறுகள் அல்லது பிற பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி உயரமான கட்டிடங்கள் மீது ஏறும் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களைச் அவர்கள் இதற்கு முன்னரும் செய்துள்ளனர்.

முன்னதாக, மலேசியாவின் 2,227 அடி உயரமுள்ள மெர்டேகா 118 கோபுரத்தின் மீது ஏறியது குறித்த ஆவணப்படம் ஒன்றிலும் இவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்த ஜோடி எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உள்ளூர் நிலையங்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளை வழங்கும் ஒளிபரப்புக் கோபுரத்தின் உச்சி வரை சென்றதால், அவர்களது பாதுகாப்பு கருதி அதன் சேவை செயலிழக்கச் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்தக் கோபுரம் மின்சார விநியோகத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் போது அதன் மேல் ஏறுவது குறிப்பிட்ட சில அபாயங்களை ஏற்படுத்துகிறது.

இதனால் அவர்கள் அலைகளின் தாக்கத்திற்கு உள்ளாகும் அபாயம் இருந்ததால், எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அதன் அலைவாங்கியை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர்கள் மீது முறையற்ற அத்துமீறல், கவனக்குறைவாக ஆபத்தை விளைவித்தல், ஒழுங்கீனமான நடத்தை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts