Ad Widget

நாயாறு சென்ற தமிழர்கள் விரட்டியடிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலில் தமது நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற தமிழ் மக்களை “இங்கே வர வேண்டாம் ஓடிப் போங்கள்” என்றவாறு இராணுவத்தினர் விரட்டியடித்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

நாயாறுப் பாலத்துக்கும் கொக்குத்தொடு வாய்க்கும் இடையிலுள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலுக்கு பங்குனி உற்சவத்தை முன்னிட்டு 15 தொடக்கம் 20 வரையிலான குடும்பங்கள் நேற்று நண்பகல் சென்றன கோயில் பொங்கலுக்குரிய ஆயத்தங்களை அந்தக் குடும்பத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

தமது நேர்த்தியைச் செலுத்துவதற்காகவே அவர்கள் அங்கு சென்றிருந் தனர். திடீரென அங்கு இராணுவத்தினர் நால்வர் வந்து சேர்ந்தனர். அவர்களில் ஒருவர், “இங்கு யாரும் பொங்கக்கூடாது பொங்குவதாக இருந்தால் நாயாறுப் பாலத்துக்கு அப்பால் கொண்டு சென்று பொங்குங்கள்” என்று கூறியவாறு அங்கிருந்து விரட்டினார் ” என்று மக்கள் உதயனிடம் தெரிவித்தனர்.

அதை அடுத்து வேதனையுடன் திரும்பிச் சென்ற அவர்கள் சேருவில பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமு சிவலோகேஸ்வரனிடம் முறையிட்டனர். ஆலயம் அமைந்துள்ள பகுதியைச் சூழவும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துவதாக சிவலோகேஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts