சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி பெற்றுத்தரப்படுமென சுகாதார அமைச்சர் உறுதி

முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியைச்சேர்ந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்படுமென சுகாதார அமைச்சர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

அத்தோடு முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னிப்பிராந்தியத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்செய்வதுதொடர்பிலும் தம்மால் கூடியவிரைவில் உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் சுகாதார அமைச்சர் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 21.01.2026 அன்று நாடாளுமன்றக்கட்டடத்தொகுதியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழுவிற்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – குமுழமுனையில் 25.01.2026 இடம்பெற்ற தனியார் மருந்தகத் திறப்பு விழா ஒன்றில் பங்கேற்று கருத்துரைக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சருடனான சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வன்னியிலுள்ள வைத்தியசாலைகளின் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பௌதீகவளப் பற்றாக்குறைகள் தொடர்பில் சுகாதர அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.

அத்தோடு சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த சிறுமி குகநேசன் டினோஜாவினுடைய சர்ச்சைக்குரிய மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தரவேண்டுமெனவும் இதன்போது சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தேன்.

இதன்போது சுகாதார அமைச்சர் பதிலளிக்கையில்,

டினோஜாவின் சர்ச்சைக்குரிய மரணத்திற்கான நீதியான விசாரணையை நடாத்துவதுகுறித்து சபைமுதல்வரும் அமைச்சருமான விமல் ரத்நாயக்கவிடம் என்னால் ஏற்கனவே விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில், விமல் ரத்நாயக்க தன்னுடனும் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் தாம் அறிவோம் எனவும் தெரிவித்தார்.

எனவே சிறுமியின் குறித்த சர்ச்சைக்குரிய மரணம்தொடர்பில் உரியவகையில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.

அத்தோடு முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னிப்பிரந்தியத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீகவளப் பற்றாக்குறைகளைச் சீர்செய்வதுகுறித்தும் தம்மால் கூடியவிரைவில் கவனம் செலுத்தப்படுமெனவும் தம்மிடம் சுகாதார அமைச்சர் பதிலளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கருத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts