Ad Widget

நாடளாவிய ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படவிருந்த ஹர்த்தால், அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.

முன்னதாக, அந்த அமைப்பு விடுத்திருந்த பகிரங்க அழைப்பில், நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து நாளையதினம் நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலை மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தது.

அந்த அமைப்பு விடுத்திருந்த வேண்டுகோளில், ஜனநாயக ரீதியில் எமக்குள்ள உரிமையைப் பயன்படுத்தி நாடாளாவிய ரீதியில் இந்த ஹர்த்தாலை வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவுமாறு சகல தரப்பினரிடமும் வேண்டிக்கொள்கிறோம் எனவும் அரச தனியார் நிறுவனங்களும், அரச தனியார் பாடசாலை நிர்வாகங்களும், வர்த்தக நிறுவனங்களும் தமது கடமையிலிருந்து விலகி இந்த ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts