சர்வதேச அளவில் மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காகத் தளர்வின்றிப் போராடி வரும் சர்வதேசச் சட்ட வல்லுநரும் தென்னாப்பிரிக்கத் தமிழ் வம்சாவளியுமான நவநீதம்பிள்ளைக்கு (நவிப்பிள்ளை) 2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் டேர்பன் நகரில் ஒரு ஏழைப் பேருந்து நடத்துநரின் மகளாகப் பிறந்து, நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களுக்காக நீதிமன்றங்களில் குரல்கொடுத்தவர் நவிப் பிள்ளை.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் தென்னாப்பிரிக்கப் பெண்ணான இவர், ருவாண்டா இனப்படுகொலை சர்வதேச நீதிமன்றத்தின் தலைவராகப் பணியாற்றியபோது, ’பாலியல் வன்கொடுமையை இனப்படுகொலைக்கான ஆயுதம்’ எனக் குற்றவியலில் வரையறுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியவர்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராக 2008 முதல் 2014 வரை பொறுப்பு வகித்த காலத்தில், உலகெங்கிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்தார். குறிப்பாக, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்துச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
2013 இல் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து உலகிற்கு உண்மை நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியவர்.
நீதிமன்ற அறைகளில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மேடைகள் வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் நீதியின் அடையாளமாகவும் திகழும் 85 வயதான நவி பிள்ளைக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கும் இந்த நோபல் பரிசு, மனித உரிமைப் போராட்ட வரலாற்றுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய மகுடமாகும்.