Ad Widget

நல்லுாா் திருவிழாவிற்கு பாதுகாப்பு வழங்கப்படும் – பிரதமா் ரணில்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மடு மாதா ஆலயம் ஆகியவற்றின் திருவிழாக்களை எந்த அச்சமும் இல்லாமல் நடாத்துமாறு பணித்திருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளாா்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர் நாட்டில் சுற்றுலாத்துறைக்கு பெரியதொரு தாக்கம் ஏற்பட்டது. ஆனால், நடப்பாண்டில் கூடிய சுற்றுலாத்துறை வருமானத்தை உத்தேசித்து பல்துறை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

ஆனால், துரதிஷ்டவசமாக தாக்குதல்களால் பின்னடைவு ஏற்பட்டது.தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துள்ளோம். ஐ.எஸ். அமைப்பின் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் ஈர்க்கப்பட்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 200 பேர் வரையில் கைதுசெய்து அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம்.கண்டியில் இடம்பெறவுள்ள எசல பெரஹெரா மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெறவுள்ள பெரஹெராக்களையும் நடத்தக் கூடிய பாதுகாப்பான சூழல் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டிலிருந்த அச்சுறுத்தல் நிலைமை விலகி சாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை எவ்விதத்திலும் குறையவில்லை. விமான நிலையக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா விடுதிகளில் விலை குறைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான நாடாக இலங்கை வெளிப்படுகின்றது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

Related Posts