Ad Widget

தொடரும் சீரற்ற காலநிலை – யாழில் அதிக மழைவீழ்ச்சி பதிவு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உயர்வாகக் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை யாழில். கடந்த சில மாதங்களாக கடும் வெப்பமான காலநிலை நிலவிவந்த நிலையில், நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று 7.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் யாழ்.பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.

மேலும் யாழில். நேற்று பெய்த அடைமழையின் போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts