Ad Widget

தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து ஊழல்ளையும் நிறுத்துவோம்! கட்சிக்குள் பிளவு இல்லை!! – மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிளவுபட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தனது தனிப்பட்ட நலன்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட விரும்பாததாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியான நீங்கள் ஏன் பொதுத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தீர்கள்?, உங்கள் முடிவால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிளவுபட்டுள்ளதா? என்ற கேள்விகளுக்கு மஹிந்த பதிலளிக்கையில்,

“எனது கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே நான் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்தேன். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்காகவும் அதைவிட முக்கியமாக நாட்டு மக்களுக்காவும் நான் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தேன்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிளவுபடவேயில்லை. எனது தனிப்பட்ட நலன்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட விரும்பாததாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்கவில்லை” – என்றார்.

ஏன் சிறுபான்மை மக்களின் மனதை வெல்ல முயற்சிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் பல நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டது. தொடர்ந்தும் அதற்கு முயற்சி செய்வோம்” – என்றார்.

பொதுத்தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டால் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக மீள ஆரம்பிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் அனைத்து ஊழல்களும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts