Ad Widget

சுமந்திரனுக்கு கெடு காலம் ஆரம்பம்… ஜெனிவா போனது ஏன் தெரியுமா?: தமிழ் தேசிய மக்கள் முன்னணி

“சுமந்திரனுக்கு கெடு காலம் ஆரம்பித்திருக்கிறது. தெற்கிலும் அவரை எதிர்க்கும் நிலைமை உருவாகியிருக்கிறது. சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சம்பந்தன் உட்பட கூட்டமைப்பில் எவர் பேசுவதாக இருந்தாலும் தேர்தலை மையப்படுத்தியே எல்லாம் பேச்சும் நடக்கிறது. சிறிதரன் உட்பட அனைவரம் இன்றைக்கு தமது அரச விசுவாசத்தைக் காட்ட முனைந்து இருக்கின்றார்கள்.“

இவ்வாறு கூறியிருக்கிறார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் கொக்குவில் பகுதியிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (29) மதியம் நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே செ.கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் நிறைவடையும் நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றது. இக் கூட்டத் தொடரினூடாக ஒரு நீதி கிடைக்குமென தமிழ் மக்கள் பலத்த எதிர்ப்பார்ப்புக்களில் இருந்தனர். அதற்கமையவே இம்முறையும் இலங்கைக்கு சர்வதேச கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் வழங்கக் கூடாதென வடக்கு கிழக்கில் மக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

ஆனாலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்பார்ப்புகளுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் இலங்கைக்கு மீளவும் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் தாயகத்திலும் புலத்திலும் உள்ள பலரும் கால அவகாசம் வழங்கப்படாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றே வலியுறுத்தியிருந்தனர். அதேநேரம் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தேசங்களிலுள்ள சில சந்தர்ப்பவாத அமைப்புக்களுமே மேற்குல சக்திகளுடன் இணைந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதுடன் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அல்லது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இலங்கை அரசிற்கு கண்காணிப்பு என்ற போர்வையில் கால அவகாசம் வழங்கப்படுவதற்கு கூட்டமைப்பினரே ஆதரவை வழங்கியிருக்கின்றதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் தமிழ் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் இனியும் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றும் கூட்டமைப்பினரும் கோரியிருந்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யத் தயாரில்லை. ஏனெனில் இந்த அரசையும் அரச படைகளையும் பாதுகாக்கின்ற தேவை மட்டுமே அவர்களுக்கு இருக்கின்றது.

இந் நிலையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறலையும், உள்ளக பொறிமுறையில் நீதியையும் வழங்கத் தயாராக இல்லாத போது அரசிற்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்குவது பயனற்றது. இலங்கை அரச தலைவர்களே அதனை செய்ய மாட்டோமென மறுத்து வருகின்ற நிலையில் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்வதனை ஏற்றுக் கொள்வீர்களா என எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆணையாளரிடமே கேட்டிருக்கின்றார்.

ஆனால் கூட்டமைப்பினர் அதனைச் செய்யவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இந்திய, மேற்கு நாடுகளின் நலன்களினடிப்படையில் அவர்கள் சொல்வதையே செய்கின்றனர். அவர்கள் எதனைச் சொல்கின்றார்களோ அதனையே இலங்கைக்குள்ளும் ஜெனிவாவிலும் செய்து வருகின்றனர். ஆகவே மக்கள் தான் இதனை சரியாக புரிந்து கொண்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

மேலும் ஐ.நநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் இலங்கை அரசாங்கம் அதற்கு இணை அனுசரணை வழங்கியமை தொடர்பிலும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருக்கும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தீர்மானத்தை நிறைவேற்ற போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

எம்மைப் பொறுத்தவரையில் ஐனாதிபதி சொல்வது ஏமாற்று கருத்துத் தான். அவருக்கு தெரியாமல் ஏதும் நடக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இந்த தீர்மானித்தால் ஏதும் நடக்க போவதில்லை அதேநேரம் அத் தீர்மானத்தில் உள்ளது ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறி இணை அனுசரணையும் இலங்கை அரச தரப்பினர்கள் வழங்கியுள்ளனர்.

இந்திய மேற்கு நாடுகள் தமக்காக தான் இத்தீர்மானத்தைக் கூட நிறைவேற்றியிருக்கின்றனர். இதனூடாக இலங்கை மீது அவர்களுக்கான பிடி உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையினால் வரப்போகும் தேர்தலில் இந்திய மேற்கு நாடுகளுக்கு எதிரானவர்கள் வெற்றி பெற்று வருகின்ற போது தான் இதனை கையில் எடுப்பார்கள்.

ஆனால் தமக்குச் சார்பானவர்கள் வந்தால் அதனைக் குறித்த பெரிதும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இதனூடாக எல்லாமே நீர்த்தப் போகின்ற வேலைகள் தான் நடைபெறும். ஆக மீண்டும் விசாரணை நடைபெற்று தமிழர்களுக்கு நீதி கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. இப்படியே தான் காலத்தை இழுத்தடிக்கப் போகின்றனர். ஆகவே இதனை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்ட சென்று நீதியைப் பெற்றுக் கொள்கின்ற நடவடிக்கைகளையே நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

இலங்கை நாட்டின் ஐனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச மற்றும் எதிர்த் தரப்பினர்கள் இந்த நாட்டில் விசாரணைகளை நடாத்தப் போவதில்லை என்று கூறுகின்றனர். அதே நேரம் முன்னாள் இரர்னுவத் தளபதி சரத் பொன்சேகா தன்னிடம் யுத்தக் குற்ற ஆதாரங்கள் இருப்பதாகவும் விசாரணைகளை நடாத்தப்பட வேண்டுமென்றும் கூறுகின்றார். ஆனாலும் போர்க் குற்றம் என்ற கோணத்தில் விசாரணைகளை நடாத்த பொன்சேகா தயாராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது.

ஏனெனில் போர் நடைபெற்ற காலத்தில் இரர்னுவத் தளபதியாக இருந்தவரே அவர் தான். ஆகையினால் அவ்வாறானதொரு விசாரணைகளுக்கு அவர் ஒருபொதும் ஒத்துழைக்கப் போவதில்லை. ஆனாலும் அந்தப் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் சரத் பொன்சேகாவும் குற்றவாளியாகத் தண்டிக்கப்படுவார். ஆக அவரும் உண்மையில் அத்தகைய விசாரணைகளைக் கோரவோ அல்லது அதற்கு ஒத்துழைக்கவோ போவதில்லை. அனாலும் அவர் தன்னை பரிசுத்தமானவராகக் காட்டுவதற்கு முனைகின்றார்.

முன்னைநாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய ராஜபக்ச இருந்த காலத்தில் தான் தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து உயிரோடு எரித்தும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவரது நேரடி வழிகாட்டலிலேயே அத்தனை கொடூரங்களும் நடந்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக அத்தனை கொடூரங்களையும் முன்னின்று வழிப்படுத்தியதே அவர் தான். ஆக அவர் மீண்டும் பதவிக்கு வந்தால் இன்னும் பலதையும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யக் கூடிய ஆபத்துக்கள் இருக்கின்றன.

ஆகவே மொத்தத்தில் இந்த நாட்டின் ஐனாதிபதியாக அவர் வந்தால் தமிழ் மக்களுக்கு நிச்சயமாக ஆபத்து தான். அந்த ஆபத்தை தடுக்க நிரந்தரமான வேலைகளைச் செய்ய தவறியிருக்கின்றனர். அதாவது அவரது தலைமையிலும் வழிகாட்டலிலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் அநீதிகள், கொடுமைகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று விசாரணைகள் நடைபெற்றிருந்தால் அவர் இன்றைக்கு தண்டிக்கப்பட்டிருப்பார். ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பினர் அதனைச் செய்யவில்லை. அவரைத் தூக்குமேடைக்கு கொண்டு செல்வதையே தடுத்து கூட்டமைப்பினரே அவரைப் பாதுகாத்துள்ளனர்

இவ்வாறு அவரைப் பாதுகாத்து பலப்படுத்தியிருப்பது சம்பந்தன் சுதந்திரன் தலைமையிலான கூட்டமைப்பு குழு தான். ஆக இந்த ஆபத்துக்களை விளங்கி கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை கூட்டமைப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்ய அவர்கள் தவறியிருக்கின்றனர். ஆகவே இதனால் ஏற்படும் ஆபத்தை பொறுப்பேற்க வேண்டும்.

அரசிற்கு எதிரான கருத்துக்களை கூட்டமைப்பினர் சொன்னாலும் தொடர்ந்தும் இந்த அரசிற்கு ஆதரவு வழங்கியே வருகின்றனர். இந்த அரசை முண்டு கொடுத்து பாதுகாக்கிறதே கூட்டமைப்பு தான். இந்திய மேற்கு நாடுகளின் உத்தரவுகளுக்கமைய அரசைப் பாதுகாக்கின்ற செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் தான் ஜெனிவாத் தீர்மானத்தில் கூறப்பட்ட கலப்பு பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஏற்று நடைமுறைப்படுத்தாவிட்டால் சர்வதேச நீதிமன்றம் கொண்டு செல்வோம் என்று கூட்டமைப்பினர் கூறுகின்றனர். ஆனால் அதனையும் அரசாங்கம் எதிர்க்கின்றது. ஆனாலும் இந்த அரசை கவிழ்வதற்க; விட கூடாது என இந்திய மேற்கு நாடுகள் துடிக்கின்றன.

மேலும் தேர்தல்கள் பல வரவிருப்பதால் அத் தேர்தல்களை மையமாக வைத்து தான் பாராளுமன்றில் நடக்கும் பேச்சுக்கள் அமைகின்றன. அதனூடாக இரு தரப்பினரும் தங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க முயல்கின்றனர். குறிப்பாக 10 நாட்களுக்கு முன்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடிந்தால் விண்ணாதி விண்ணர்கள் கொண்டு செல்லட்டும் என்று கூறிய சுமந்திரன் தான், இன்றைக்கு அதனைத் தாங்கள் கொண்டு செல்வோம் என்று கூறுகின்றார்.

இவை எல்லாம் தமிழ் மக்களின் ஆதரவை தாம் பெற்றுக் கொள்வது மட்டுமல்லாத இதற்கு எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதனூடாக சிங்கள மக்களின் ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெற்றுக் கொடுப்பதற்காகவும் தான். தமிழ் மக்களுக்காக அவர் ஜெனிவா போகவில்லை. இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவும் இந்திய மேற்கு நாடுகள் எதை சொல்கிறதோ அதைச் செய்வதற்காக அவர்களது சேவகனாக தான் சென்று செயற்பட்டிருக்கின்றார்.

மேலும் வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக இப்பொது நாடகமாடுகின்றனர். அதே நேரத்தில் தற்போது சுமந்திரனுக்கு கெடுகாலம் வந்திருக்கின்றது. நாட்டில் தேர்தல்கள் வரப்போவதால் தெற்கிலும் எதிர்க்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. ஆனால் அவை எல்லாம் ரணில் தரப்பிற்கு ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதற்கான நாடகங்கள் தான்.

இன்றைக்கு சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சம்பந்தன் உட்பட கூட்டமைப்பில் எவர் பேசுவதாக இருந்தாலும் தேர்தலை மையப்படுத்தியே எல்லாம் பேச்சும் நடக்கிறது. சிறிதரன் உட்பட அனைவரம் இன்றைக்கு தமது அரச விசுவாசத்தைக் காட்ட முனைந்து இருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் வாக்கு வங்கிக்காக தமிழ் மக்களை ஏமாற்றவும் பார்க்கின்றனர் ஆனால் மக்களுக்காக உண்மையாக இதய சுத்தியுடன் நடக்கவில்லை. அவ்வாறு இதயசுத்தி இவர்களுக்கு இருந்து இருந்தால் ஒற்றையாட்சிக்கு போவதற்கு எப்படி ஆதரவு வழங்கியிருப்பார்கள். இவை எல்லாம் நிரந்தர தீர்வை கேட்ட வேண்டிய இடத்தில் கேட்காமல் ஒற்றையாட்சிக்கு ஆதரவை வழங்கிவிட்டு இப்போது சகலரையும் ஏமாற்றி வாக்கு வங்கியை நிரப்ப பார்க்கின்றனர்“ என்றார்.

Related Posts