Ad Widget

சிறந்த சேவையாற்ற வைத்தியசாலை பணியாளர்கள் முன்வர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்.போதனா வைத்தியசாலையின் உயர் அதிகாரிகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளர்களுடனான அணுகுமுறையும் மனிதநேயமும் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

daklas-hospital

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரி மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இலங்கை சுதந்திர சுகாதார சேவைகள் சங்கத்தின் தொழிற்சங்கத்துடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு கடமையாற்றும் அனைவரும் நிரந்தர சேவையின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் கடமையுணர்வுடனும், விஸ்வாசத்துடனும் பணிசெய்ய வேண்டும்.

அத்துடன், மேலதிகாரிகளுக்கு கீழ்ப் பணிந்து நடந்து கொள்ளும் அதேவேளை, இங்கு வரும் நோயாளர்கள் தமது நோய்களின் நிமித்தமாக உங்களுக்கு பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தும் பட்சத்தில் அவற்றை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அவர்களுடனான உங்களது அணுகுமுறைகள் மனிதநேயத்துடன் அமையப் பெற வேண்டும்.

அதுமட்டுமல்லாது நோயாளர்கள் ஒவ்வொருவரும் திருப்திபடும் வகையில் உங்களது சேவைகள் அமையப் பெறுவதுடன், ஒருவரையொருவர் மதிக்கும் பண்பையும் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.

தொழிற்சங்கத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காணும் பொருட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள், இவ் வைத்தியசாலையின் சுத்தம், சுகாதாரம் தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

Related Posts