Ad Widget

கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் மகிந்த தீர்வை பெற்றுத் தருவார் – யாழில் திஸ்ஸ

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான இணைப்பாளராக என்னைத் தற்போது மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என் மீது நம்பிக்கை வைத்துத் தமிழ் மக்கள் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவேண்டும்” இவ்வாறு முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, யாழ்ப்பாணத்தில் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் மக்கள் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதன் மூலமே மகிந்த ராஜபக்ச தனது கட்சிக்குள் காணப்படும் தமிழ் விரோத சக்திகளிடம் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்களின் எண்ணிக்கையை சுட்டிக் காட்டுவதுடன் தமிழ் மக்களினது கருத்துக்களை உள்வாங்கியே நாங்கள் செயற்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தும் சூழல் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்கும் யாழ்ப்பாணம் முகாமையாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகளுக்குமிடையிலான சிறப்பு அரசியல் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) முற்பகல்-10 மணி முதல் நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு நீண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த போது இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு நான் தலைமை தாங்கியிருந்தேன். எங்கள் குழு அறிக்கையொன்றைத் தயாரித்து மகிந்த ராஜபக்சவிடம் சமர்ப்பித்திருந்தோம். இந்த அறிக்கையில் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் சிறுபான்மைத் தமிழ் மக்களும் திருப்தியளிக்கக் கூடிய வகையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

எனினும், போர் முடிவடைந்து குறுகிய காலமென்பதால் தமிழ்மக்களுடைய சமூக, பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டுமென்ற காரணத்தாலேயே எமது குழுவின் அறிக்கை தொடர்பில் மகிந்த ராஜபக்ச கவனம் செலுத்தவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் காணப்படும் களநிலமைதான் மகிந்த ராஜபக்ச குழுவினர் தமிழ் மக்களுக்குச் சார்பான தீர்மானங்களை எடுப்பார்களா? என்பதைத் தீர்மானிக்கும்.

தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பதன் மூலம் மகிந்த ராஜபக்சவின் தமிழ் நல்லெண்ணக் கரங்கள் பலப்பட்டு விடும் – என்றார்.

Related Posts