Ad Widget

கோட்டா வேட்பாளராக அறிவிக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது – சந்திரிகா

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவளித்தமைக்கு பிரதான காரணம் ஒன்று இருந்தது. 2015 க்கு முன்னர் ஊழல் நிறைந்த அரசாங்கமே இருந்தது.

அந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆட்சியில் இருந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் அன்றைய அரசாங்கத்தின் பொருளாதாரத்தினால் நன்மைகள் கிடைக்கவில்லை.

இதனால் அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு, பலர் வெவ்வேறு துன்புறுத்தல்களுக்கும் முகங்கொடுத்தனர். யுத்தத்தை அவர்கள் நிறைவு செய்தார்கள். ஆனால் அவர்கள் தனியாக யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வரவில்லை.

2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாம் பகுதியளவில் நிறைவடையச் செய்திருந்ததையே அவர்கள் முழுமையாக நிறைவடையச் செய்தார்கள். எனினும் அதுவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எனினும் எதிராகச் செயற்பட்ட இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டனர். அது மாத்திரமின்றி இராணுவத்தினர், பாதுகாப்பு செயலக அதிகாரிகள் என்று பலர் கொல்லப்பட்டார்கள். குறிப்பாக ஊடகவியலாளர்கள் பலர் இந்த காலகட்டத்தில் கொல்லப்பட்டார்கள் எனவும்” சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

Related Posts